×

கடல் வழியாக படகில் வந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தாமிர குழாய்கள் திருடிய 10 பேர் கைது

ஸ்பிக்நகர் : தூத்துக்குடியில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சுமார் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகிறது. இந்த மின் உற்பத்தி கலன்களுக்கு தேவையான தளவாடப் பொருட்களை வைப்பதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக பண்டகசாலை அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி ஒரு கும்பல் கடல் பகுதி வழியாக வந்து அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள பொருட்கள் வைப்பறையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தாமிர நிக்கல் குழாய்கள், கன்டென்சர் குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட தாமிர நிக்கல் குழாய்களை திருடிச் சென்றது.

இதுகுறித்து பண்டகசாலை கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணி தெர்மல்நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள், கொள்ளை நடந்த பகுதியை பார்வையிட்டு அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் பண்டக சாலை பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக 4 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து தலைமை பொறியாளர் (பொறுப்பு) ஜஸ்டின் ஜெகதீப்குமார் உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி தாமிர குழாய் திருட்டில் ஈடுபட்ட கேம்ப் 1 ஜெயபிரேம் சிங் (42), முத்தையாபுரம் மாசானமுத்து (38), மதன் (26), மாரிமுத்து (43), முத்துநகர் பிரகாஷ் (26), சுப்பிரமணி (27), கோயில்பிள்ளை நகர் குழந்தைபாண்டி (26), பெரியசாமி நகர் கணேச மூர்த்தி (31), அழகர் (27), ஊரணி ஒத்தவீடு சந்தனராஜ் (26) ஆகிய 10 பேரை கைது செய்தனர். இவர்கள் எவ்வாறு இந்த கடத்தலில் ஈடுபட்டனர், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடல் வழியாக படகில் வந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தாமிர குழாய்கள் திருடிய 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Analmin Station ,Spignagar ,Thoothukudi ,Tamil Nadu Electricity Board ,Thoothukkudi Analmin Station ,
× RELATED தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ₹9 லட்சம் காப்பர் வயர் திருட்டு